Register   |   Login     

எங்களைப்பற்றி

'வாசகர்களின் சேவகரான' வேலாயுதத்தின் வியத்தகு சாதனையால் விஜயா பதிப்பகம் தமிழ் நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் என்னற்ற வாசகர்களைத் தன்னகப் படுத்தியுள்ளது. தொழில் நகரமான கோவையை 'இலக்கியக் கோவை'யாகத் தமது விஜயா பதிப்பகத்தின் மூலம் மாற்றிப் பதிப்புத்துறையில் வாசகர்களின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டு, பல்வேறு அரசுத் திட்டங்களின் வாயிலாக, நூலக வளர்ச்சியையும் மேம்படுத்தினார். இவரது கடும் முயற்சியல் இன்று விஜயா பதிப்பகம் 9 கிளைகளை துவங்கியுள்ளது. கோவையில் நேரு உள்விளையாட்டரங்கம் அருகில், காந்திப்புரம் மற்றும் சிங்கநல்லூர் பேருந்து நிலையங்கள் மற்றும் திருப்பூர், ஈரோடு, திருச்செங்கோடு, கரூர், பொள்ளாச்சி மற்றும் பழனி பேருந்து நிலையங்கள் என ஒன்பது இடங்களில் விஜயா பதிப்பக விற்பனை நிலையங்கள் உள்ளன.

இன்று வரை ஏறத்தாழ 800 புத்தகங்களுக்கு மேல் வெளியிட்டுள்ள விஜயா பதிப்பகம் சுயமுன்னேற்றம், மருத்துவம், அறிவியல், சினிமா, சிறுவர் நூல்கள், கல்வி சம்பந்தமான நூல்கள், நாவல்கள், கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், ஆன்மீகம், ஜோதிடம் என அனைத்து வகை நூல்களையும் வெளியிட்டுள்ளது. மக்களின் ரசனையக் கூர்தீட்டிக் கொடுப்பது தான் அருங்காட்சியகத்தின் பணி. வாசகர்களின் ரசனையைச் செழுமைப்படுத்த வேண்டியது தான் புத்தக விற்பனையாளனின் பணி. இது குறித்து வேலாயுதம் சிந்தித்த சிந்தனையின் வெளிப்பாடு தான் 1979-ம் ஆண்டு முதன் முதலில், வாசகர்களின் திருவிழா கோவை, டவுன்ஹாலில் உருவாகக் காரணமாக அமைந்தது.

அவ்விழாவில் திருவாளர்கள் எம்.எஸ். உதயமூர்த்தி, மு.மேத்தா, வைரமுத்து, நாஞ்சில் நாடன், சுஜாதா, புவியரசு, சிற்பி போன்ற பல எழுத்தாளர்கள் பங்கேற்றனர். வாசகர்களுக்கு இலக்கிய கலைஞனைக் கணட மகிழ்ச்சி, படைப்பாளிகளுக்கு ரத்தமும் சதையுமாக விளங்கும் வாசகர்களை நேரில் கண்ட உவகை. இருவருக்கும் திரு.வேலாயுதம் அவர்களின் விஜயா பதிப்பகம் எனற பலம்!.

இதுவரை தொடர்ந்து வருடத்திற்கு ஒரு முறை வாசகர் திருவிழா மட்டுமல்லாது பாராட்டு விழாக்கள், நூல் வெளியீட்டு விழாக்கள் என 300க்கு மேற்பட்ட விழாக்கள் நடத்தப் பெற்றிருக்கின்றன. விஜயா பதிப்பகம், ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் தவறாமல் கலந்துகொள்கிறது. அதுமட்டுமின்றி மாணவர்களின் படிப்பார்வத்தைத் தூண்டும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறது.

'விலை கொடுத்து ஒரு புத்தகத்தை வாங்குவதன் மூலம், விலை மதிக்க முடியாத ஒரு செல்வத்தை வீட்டுக்கு கொண்டு செல்கிறீர்கள்' போன்ற விஜயா பதிப்பகத்தின் வாசகங்கள், வாசகர்களிடையே புத்தகம் படிக்கும் திறனை பெருக்கிவருகிறது. 'நா நயம்', 'நாணயம்' இரண்டிலும் சிறந்த விளங்கும் விஜயா பதிப்பகம் படைப்பாளிகளின் நல்ல படைப்புகளை வாசகர்களுக்கு கொண்டு செல்லும் நல்ல வாகனமாக விளங்கிவருகிறது.

Copyright © Vijaya Pathippagam 2020. All Rights Reserved.